அன்புள்ள
என் நிலவு மன்னவனுக்கு...
என்
அன்பே,
என் உயிருக்குள்
வெளிச்சம் பாய்ச்சும் வெண்துண்டு கதிரவனே !! இப்போதைக்கு நான் உன்னிடம் கேட்பதெல்லாம் என்
கனவுகளில் மட்டும் நீ காட்டுகின்ற அந்தக்
காதலை, நிஜத்திலும் கொஞ்சம் கொடுத்துவிடு. இல்லை.. இல்லை. கொஞ்சமாக அல்ல...
மொத்தமாக கொடுத்து விடு ! அதுவும் முத்தமாக கொடுத்து விடேன்.
எத்தனையோ
இரவுகள் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன். வெயிலில் நனைந்து, மழையில் காய்ந்து உன்
விரல்களைக் கோர்த்துக்கொண்டு எங்கெங்கோ சுற்றியிருக்கிறேன். காபிக் கோப்பையின் கதகதப்பை உன் நெஞ்சில் உணர்ந்து, தலை
சாய்த்து உறங்கியதில் உலகத்தையே மறந்திருக்கிறேன். உன் கண்களைப் பார்த்துப்
பார்த்து, இந்தப்
பிறவியின் மொத்த ஆயுளையும் அங்கேயே கழித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.
ஆனால்,
ஒவ்வொரு நாளும் சூரியன் யாசகம் கேட்க
பூமித் தெருவுக்கு கதிரேடு ஏந்திக்கொண்டு வந்து விடுவதில் விடிந்துவிடுகிறது. எப்போது
அவன் சாக? நம் காதல், கனவு உலகத்திலேயே அமரத்துவமாய் வாழ? விடிந்ததும் நீ கனவிலிருந்து மறைந்துவிடுகிறாய்.
நான் மட்டும் உன்னைத் தேடியபடி என் நிஜ வாழ்க்கைக்குள் திரும்பி, வெதும்பி வந்துவிடுகிறேன்.
என்ன
செய்வது? உனக்குப்
பின்னால் பிறந்திருந்தால், ஒருவேளை
உன்னைக் காதலிக்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்குமோ என்னவோ! உனக்கு முன்னமே
பிறந்துவிட்ட குற்றத்திற்காக, உன்னை
இழந்து தவிக்கிறேன்.
சில
நேரங்களில் ஒரு விபரீதமான ஆசை தோன்றுகிறது தெரியுமா?
பேசாமல்,
உனக்கு முன்னமே இறந்து போய், மீண்டும் ஒரு குழந்தையாகப் பிறந்து,
உன்னைத் தேடி வந்து சேரலாமா என்று
தோன்றுகிறது. ஒருவேளை இந்த முறை வேறொரு கருவில் பிறந்தாலும் பரவாயில்லை. வேறொரு
பெயர், வேறொரு முகம்,
வேறொரு வாழ்க்கை... எதுவாக
இருந்தாலும் சரி. மீண்டும் உன்னைக் காதலிக்கும் வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் என்றா
சொல்லப் போகிறேன்?
கடவுள்
மனது வைத்தால் என் பிறவிகள் மாறலாம். என் முகம் மாறலாம். புதுமையின் பொலிவில், பழைய
பிசுக்குகள் கரைந்து போகலாம். ஏன், என் நினைவுகள் கூட மாறிப்போகலாம். ஆனால்,
ஏதோ ஒரு மூலையில் உன்னைத் தேடும்
இந்த இதயத்தை மட்டும் எப்படி மாற்றுவது? எங்கு உயிர் தரித்தாலும் நான் உன்னுடைய நிரந்தர வாடிக்கையாளர்தானே?
ஒவ்வொரு பிறவியிலும் உன்னிடம்தானே காதல் மனு கொடுக்க
வரப் போகிறேன். ஒரு வேளை அடுத்தடுத்த பிறவியில் சலுகை விதிகளை அவ்வப்போது மாற்றி விடுவாயோ?
என் காதல் கடவுள் நீ தானே? எனக்கு மட்டும் உன் விதிகளை மாற்றிவிடேன். காலத்தைக் கொஞ்சம்
பின்னோக்கித் திருப்பிவிடேன். உனக்கு முன்பே பிறந்துவிட்ட இந்தத் தவறைச்
சரிசெய்துவிடேன். அல்லது அடுத்த பிறவியில் உனக்கு முன்னால் என்னைப் பிறக்கவிடாமல்,
உன்னுடன் ஒரே காலத்தில், ஒரே இடத்தில்
வாழும் வரத்தையாவது கொடுத்துவிடேன்.
எனக்கு
அரண்மனையும் வேண்டாம். அழியாத செல்வமும் வேண்டாம். உலகமே வியந்து பார்க்கும் ஆடம்பர
வாழ்க்கை வேண்டவே வேண்டாம். உன் வாழ்க்கையில் எனக்கென்று ஒரு சிறிய இடம் மட்டும்
வேண்டும். அங்கே உன் காதலியாக, உன்
தோழியாக, உன்
மனைவியாக... உனக்குப் பிடித்த எல்லாமுமாக வாழ்ந்துவிட வேண்டும்.
இந்தப்
பிறவியில் உன்னை அடைய முடியாததற்காக அடுத்த பிறவியிலும் உன்னையே தேடி வருவேன்.. அதற்காய்
நெருப்பின் நாக்கில் உறைந்து போகவும் தயார் என்று சொல்வது காதலின் பிடிவாதமா,
இல்லை என் பைத்தியக்காரத்தனமா என்று
எனக்கே தெரியவில்லை.
ஆனால்
ஒன்று மட்டும் தெரியும். உன் அன்பை அள்ளி அள்ளி, இந்த உலகிற்கு வழங்குவதில் நீ கர்ண
பகவான் தான். நான் முதன் முதலில் என் காதலை தானம் வழங்க விரும்பி உன் வீட்டுக் கதவை
தட்டுகிறேன். எனக்குத் தெரியும் இது கொஞ்சம் முட்டாள் தனத்தின் எச்சம் என்று.
பூக்கள்
பூத்துக் குலுங்கும் பூச்செடிக்கு இந்த ஒற்றை
மல்லியை தானம் அளிப்பதால் என்ன பெரிதாய் கிட்டி விடப் போகிறது என்பதும் எனக்குப் புரிகிறது.
ஆனால் ஒற்றை வானம் தானே மழையையும் தூவுகிறது, மண்ணையும் உலர்த்துகிறது. ஆக சன்னமாய்
எரியும் ஒற்றை திரி தானே என்று அலட்சியப்படுத்தாதே. அடுத்த பிறவியில் உன்னைக் காக்கும்
அபாய விளக்காய் உன்னோடிருப்பேன்.
அதற்கேனும்
அடுத்த பிறவிக்கான முன்பதிவை இப்போதே உறுதி செய்துவிடு. இந்தப் பிறவியில்
உன்னைக் காதலிக்க முடியாமல் போனாலும், அடுத்த பிறவியில் உன் காதலைப் பெறுவதற்காக
அல்ல... உன்னைக் காதலிப்பதற்காகவே மீண்டும் பிறக்க விரும்புகிறேன். உன்னைக் கனவில் மட்டும் காதலித்துக்
களைத்துப்போனவள், இனி நிஜத்திலும் உன்னைக் காதலிக்கக்
காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
உன்
நிரந்தர காதல் வாடிக்கையாளர்,
வைரமல்லி❤️
Let Me Love You in Reality
A heartfelt love letter about a love that goes beyond lifetimes. A woman dreams of being born again, not to receive love, but to love her moon man once more.
I have loved you in dreams that never saw the dawn,
And woken up to a world where you were gone.
If I was born too soon to walk beside you,
Let another lifetime bring me closer to you.
I do not ask for castles or a life of gold,
Just a place in your heart to call my own.
Even if my name and face are born anew,
Somewhere in my soul, I will remember you.
Like a single jasmine before a garden in bloom,
I bring you my love, hoping to find room.
If this life cannot hold the love I bring,
Let the next one begin where our hearts meet.
I am tired of loving you only in dreams;
Let me rest on your chest beneath the moonbeams.
- Your's VAIRA MALLI...
💌 Read More Letters:
💌 முன் கடிதம் வாசிக்க..
👉Previous Letter: A New Lustre to My Ordinary Days…
💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..
👉 More Love Letters: Love Letters
No comments:
Post a Comment