Thursday, 12 November 2026

My Ordinary Days, Now Dressed in a New Lustre…

 

A woman in a red traditional outfit holding a cup of tea and an umbrella in the rain, with jasmine flowers in her hair.

என் நாட்களின் பழக்கமான நிறங்களுக்கு புது மெருகூட்டியவனே !! 

அன்புள்ள என் நிலவு மன்னவனுக்கு – வைரமல்லியின் காதல் கடிதம் ❤️

 

என் அன்றாடத்தின் அமைதியான இடைவெளிகளுக்குள், எப்போது நீ வந்து அமர்ந்தாய் என்று தெரியவில்லை. அவ்வளவு மென்மையாய், அழகாய் இருக்கிறது உனது மாய இருப்பு.

 

சில மனிதர்கள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் போது பெரிய ஆரவாரம் எதுவும் கேட்பதில்லை. காற்று மணம் மாறுவதில்லை, வானம் நிறம் மாறுவதில்லை. ஆனாலும், அவர்கள் வந்த பிறகு பழக்கமான பாதைகள்கூட பசுமை போர்த்தியபடி புதிதாய் மிளிர்கின்றன. தினமும் கடந்து செல்லும் தெருவில் ஒரு செடி அரும்பு விட்டு இருப்பதைத் திடீரென்று கவனிப்பதுபோல, நம்மைச் சுற்றி இருந்த ஒரு அழகை அவர்களால்தான் உணர்கிறோம். எனக்கு அப்படியொரு மாற்றத்தைத் தந்தவன் நீதான்.

 

நீ என் வாழ்க்கையில் நுழைந்த பிறகு, நான் செய்யும் வேலைகள் எதுவும் மாறவில்லை. அதே சமையலறை, அதே தேநீர்க் கோப்பை, அதே சாளரத்தின் வழியே வரும் குளிர்ந்த காற்று. ஆனால் அவற்றுக்கிடையில் நான் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கிறேன். கொதித்து முடித்த அடுத்த நொடி, என் இதழ்களுக்கு தேநீரபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியோடிருப்பவள் நான். ஆனால் இப்போதெல்லாம் தேநீர் ஆறிப்போனாலும் பரவாயில்லை என்று சில நிமிடங்கள் அமைதியாக அமர்கிறேன், உன்னை நினைத்தபடி.  காரணம் இல்லாமல் சில பாடல்களை திரும்ப, திரும்ப  முணுமுணுக்கிறேன். எனக்கு தெரியாத மொழி எனில் அர்த்தங்களை தேடித் தர சொல்லி, கூகிள் உடன் அடிக்கடி சண்டையிடுகிறேன்.  அவசர வேலைகளின் நடுவே கிடைக்கும் சிறிய தருணங்களைக்கூட இப்போது ரசிக்கத் தொடங்கியிருக்கிறேன், நிதானமாய். இதற்கெல்லாம் நீதான் காரணமா என்ன?

 

உன்னை நினைப்பது எனக்கு நேர வீண் விரயம் என்றே தோன்றுவது இல்லை. மாறாக, நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் மனதுக்கு நடுவே கிடைக்கும் சிறிய ஓய்வு அது. சில நேரங்களில் உன்னைப் பார்க்க முடியாத தூரம் சற்றே வெறுப்பேற்றத்தான் செய்கிறது. உடனே உன்னிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றும் சமயங்களில் சொல்ல முடியாதபோது, அந்தச் சொல்லுக்குப் பதிலாக ஒரு நீண்ட பெருமூச்சு வெளியேறும். ஆனால் அந்தப் பெருமூச்சிலும் வருத்தத்தைவிட ஒரு இனிய நிறைவு அதிகம். ஒருவரை இவ்வளவு ஆழமாய், அடிக்கடி நினைக்க முடிகிறதே என்பதே சில சமயம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

 

சில சமயம் உன்னிடம் சொல்ல நினைத்ததை மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்க்கிறேன். நேரம் கிடைத்தால் சொல்லிவிடலாம் என்று மனதுக்குள்ளேயே குறிப்பெழுதி, மூளையின் ஒவ்வொரு இடுக்கிலும் சுருட்டி வைத்திருக்கிறேன். ஆனால் உன்னிடம் சொல்வதற்கான சந்தர்ப்பம் வந்ததும், அந்தச் சொற்கள் எல்லாம் ஒழுங்காக வரிசை கட்டி நிற்காமல் சிதறி, பதறி ஓடிவிடுகின்றன. இத்தனை விஷயங்களில் தைரியமாக இருக்கும் வைரமல்லிக்கு, உன்னிடம் மட்டும் ஏன் இப்படியொரு தடுமாற்றம் என்று புரியவில்லை. ஒருவேளை சில உணர்வுகள் பேசப்படுவதற்கு முன்பே வெட்கம் முந்திக் கொள்கிறதோ?

 

முன்பெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க ஏதாவது ஒரு காரணம் தேவைப்பட்டது. இப்போது காரணம் கேட்காமல் மனம் சில நேரங்களில் உற்சாகமாகிவிடுகிறது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் மறைக்க முடியவில்லை. என்னைப் பற்றிய என் புரிதலையே நீ சற்றே மாற்றிவிட்டாய். நான் இவ்வளவு துள்ளலுடன் இருக்க முடியுமா, ஒரு சிறிய நினைவுக்காக இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா, ஒருவரின் நலனை என் நாளின் ஒரு பகுதியாக நினைக்க முடியுமா என்று என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். உன்னைக் கண்டுபிடித்ததில் கிடைத்த மகிழ்ச்சியைவிட, உன்னால் எனக்குள் கண்டுபிடித்த இந்தப் புதிய வைரமல்லியைப் பார்ப்பதில் இன்னும் அதிகமான மகிழ்ச்சி இருக்கிறது.

 

உன் பெயரைச் சுற்றி நான் ஒரு பெரிய கதையை உருவாக்கவில்லை, மன்னவா. உன்னைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பிடிவாதமும் இல்லை. நீ நீயாக இருக்கும் அந்த எளிமையைத்தான் ரசிக்கிறேன். உன் மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்க முடியுமா என்று சில நேரங்களில் நினைக்கிறேன். உன் நாளில் சோர்வு நிறைந்திருந்தால், என் இரண்டு அன்பான வார்த்தைகள் உனக்கு ஒரு சிறிய ஆறுதலாக இருக்க வேண்டும் என  ஆசைப்படுகிறேன். அதுவே எனக்குப் போதும்.

 

நிலவு மன்னவா, காதல் என்றால் எப்போதும் அருகில் இருந்து அரவணைத்துக் கொண்டே இருப்பது மட்டும்தானா? சில சமயம் தொலைவில் இருந்துகொண்டே ஒருவரின் மனதுக்கு இத்தனை நெருக்கமாக இருக்க முடியுமென்றால், அந்த உறவுக்கு என்ன பெயர் வைப்பது? எனக்குத் தெரிந்த ஒரே பதில் இதுதான். உன்னிடம் பேசாத நேரங்களிலும் என் நாளில் உனக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தை காலம் என்னிடம் கடன் கேட்டு வாங்கவில்லை.  என் மனமே உனக்காக ஒதுக்கியிருக்கிறது.

 

ஒருநாள் இதையெல்லாம் உன்னிடம் நேரில் சொல்லும்போது,  நீ அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பாயா, இல்லை வழக்கம்போல் என்னைக் கேலி செய்வாயா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. உன் முன்னால் நான் இப்படியே உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

 

என் நாட்களின் பழக்கமான நிறங்களுக்குள் புதிய அர்த்தங்களைச் சேர்த்தவனே,  உனக்காக இந்தக் கடிதத்தை எழுதும் வைரமல்லியின் மனதில் இன்று ஒரு சிறிய கொண்டாட்டம். காரணம், அவள் யாரையோ காதலிக்கிறாள் என்பதற்காக மட்டுமல்ல.  காதலிக்கத் தொடங்கிய பிறகு தன்னையே இன்னும் அழகாக அறிந்துகொண்டிருக்கிறாள் என்பதற்காக.

 

உன்னிடம் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இன்றைக்கு இவ்வளவு போதும், மன்னவா.


உன் வருகையால் தன்னுள் புதிதாக மலர்ந்திருக்கும்,
வைரமல்லி.


A New Lustre to My Ordinary Days… ❤️


A heartfelt Tamil love letter about how love brings new colours to ordinary days and 
helps to discover a softer side of VairaMalli...


You came like a gentle breeze,
without making a sound.
Yet somehow, you brought new colours
to the ordinary days I had always known.


The same old days and familiar skies
now seem a little brighter.
My tea grows cold while I think of you,
and even the smallest things feel beautiful.


I hum songs I don't fully understand,
then search for their meaning.
My heart keeps finding little reasons to smile,
often without me even realising it.


Though miles may keep us apart,
you have found a home in my heart.
I have so many things I want to say,
but the words disappear when I try.
Even my silence feels shy around you.


You've changed the way I see myself
and brought out a side of me I never knew existed.
Perhaps love is not just about finding someone new,
but discovering a beautiful part of yourself through them.


- Your's VAIRA MALLI...


💌 Read More Letters:


💌 முன் கடிதம் வாசிக்க..

👉Previous Letter: To the Owner of My Dreams..



💙 இன்னும் என் காதல் வரிகளை வாசிக்க..

👉 More Love Letters: Love Letters

No comments:

Post a Comment