உன் ஒற்றை
புகைப்படம்.. மரங்கொத்தி மண்டையோடு வேண்டும் எனக்கு, ஓயாமல் முத்தம் கொடுத்துக் கொண்டேயிருக்க..
அன்புள்ள நிலவு மனிதனுக்கு,
இடைவேளை கொஞ்சம் அதிகம் தான் என் இந்த அடுத்த கடிதத்திற்கு..
ஏனெனில் இடைவெளியும் கொஞ்சம் அதிகம் தான் இம்முறை நம்மிடையே.. எனக்குப் புரிகிறது..
இது தவிர்க்க முடியாதது தான். ஆனால் உன்னிடம் என் வலியைக் காட்டாதிருக்க என் பத்து
விரல்களையும் குருத்தெலும்பு நொறுங்கும் அளவிற்கு
கட்டுப்படுத்தி வைத்துள்ளேன், எழுத்துக்களில் என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க.
நல்ல வேளை.. என் விரல்களில் நகங்கள் இல்லை.. நகங்களை வெட்டாமல் இருந்திருந்தால் உள்ளங்கையில்
நுழைந்து மணிக்கட்டில் வெளியே வந்திருக்கும்.
என் சிறு வயதில் என் தந்தையாரும் இப்படித்தான். அடிக்கடி வெளியூர்
செல்லும் வேலையில் இருந்ததால் இடைவெளி எங்களுக்குள்
அதிகம், என் தந்தையோடு அல்ல.. என் தாயோடு. கூடவே இருந்தாலும் என் மனது என் அப்பாவைத்
தான் தேடும். அவர் வைக்கும் உருளைக்கிழங்கு மசாலாவுக்கு, அவருடைய கிறுக்கல் கையெழுத்துக்கு
(கொஞ்சம் உன்னைப் போல), அவர் வாங்கித் தரும் frooty -க்கு, அவர் கூட்டிப் போகும் சினிமாக்களுக்கு, அவருடைய தொப்பைக்கு
(நான் 4-ஆம் வகுப்பு படிக்கும் வரை அவர் தான் என்னுடைய water bed) இப்படி எவ்வளவோ சொல்லலாம்.
இந்த அத்தனைக்கும் ஈடு காட்டும் வகையில் கிலோ கணக்கில் sweet வாங்கி வருவார், வெளியூரிலிருந்து
திரும்பி வரும்போது.. என் அக்கா அப்பா ஜாடை.. ஆனால் அப்பாவுக்கு அம்மா ஜாடையில் இருக்கும்
என்னைத் தான் பிடிக்கும். ஊரிலிருக்கும் நாட்களில் எல்லாம் என்னை அழைத்துக் கொண்டு
தான் எங்கும் வெளியே செல்வார். அதனால் தான் அம்மா, அப்பாவை விட்டு நிரந்தரமாக பிரிய
முடிவெடுத்ததும் அப்பா என்னை மட்டும் விட்டுக் கொடுக்க மறுத்து அவருடன் வைத்துக் கொண்டார்.
எனக்கு அவர்களுடைய சண்டை, அதன் காரணம் எதுவுமே புரியாத
வயது. அப்பாவுடன் இருக்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டும் தான் அப்போது இருந்தது.
ஏனெனில் என் அம்மா மிக கண்டிப்பானவர். படிப்பு விஷயத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் தண்டனை
கடுமையாக இருக்கும். ஒரு தடவை சமூக அறிவியல் தேர்வில் 95 மதிப்பெண் பெற்றிருந்தேன்.
எதனால் 5 மார்க் குறைவு என்று என் அம்மா கேட்ட போது, “பஞ்ச சீலக் கொள்கைகளை வரைக –
என்று தேர்வில் கேட்டு இருந்தார்கள், எனக்கு இந்தியா -வை வரையவா, நேரு -வை வரையவா என்று
தெரியவில்லை. அதனால் அந்த 5 மார்க் கேள்வியை தவிர்த்து விட்டேன்,” என்று பதில் சொல்ல,
என் அம்மாவுக்கு அவ்வளவு கோபம். வரைக – என்றாலும், எழுதுக - என்றாலும் ஒரு பொருள் தான், எப்படி எழுதாமல் விட்டாய் என்று
கேட்டவர்கள் எங்கள் வீட்டு வாசலில் என்னை மண்டி போடச் சொல்லி 12 ஆம் வாய்ப்பாடு வரை
தலைகீழாக சொல்லிக் கொண்டே எழுதுமாறு தண்டனை கொடுத்தார்கள்.
நான் முழங்கால் வலிக்க, கை வலிக்க சிலேடை வைத்துக் கொண்டு தேம்பியழுதவாறு
தலை கீழாக வாய்ப்பாடு சொல்லிக் கொண்டே எழுதியது
இன்றும் என் நினைவில் இருக்கிறது. அவர் எனக்கு நல்லது தான் செய்தார் என்று அப்போது
புரியவில்லை. எப்படியோ அப்பா கூட இருந்தால் இந்த மாதிரி தண்டனை ஏதும் கிடைக்காது என்ற
சந்தோஷத்தில் அப்பாவிடமே இருக்கிறேன் என்று சொல்லி விட்டேன். அம்மாவும் அக்காவை அழைத்துக்
கொண்டு சென்று விட, அப்பாவை நாம்தான் இனி பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என
உறுதி பூண்டேன்.
ஆனால் எனக்கு என்னைப் பார்த்துக் கொள்வதென்பதே அவ்வளவு
சிரமமாய் இருந்தது. 9, 10 வயதில் என் துணியை நானே துவைத்துக் கொண்டு, ஒழுங்காக தலை
வாரத் தெரியாமல் ஏனோ தானோவென்று பின்னல் போட்டுக் கொண்டு, அரை குறையாய் வீட்டு வேலைகள்
செய்து, பசிக்கும் போது மிட்டாய் சாப்பிட்டு கால் வயிறு பசியாறி, என் வயதில் உள்ள குழந்தைகளை
ஏக்கமாய் பார்த்துக் கொண்டு எப்படி ஒரு வருடம் போனது எனத் தெரியவில்லை. என் அப்பாவால்
ஒரு பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்று என் தாத்தா, பாட்டி என்னைக் கூட்டிப் போக
பல தடவை வந்து போக என் அப்பாவுக்கும் அது புரிந்ததோ என்னவோ எனக்கு தெரியாமல் ரகசிய
உடன்படிக்கை அவர்களுடன் போட்டுக் கொண்டார்.
அவர் எப்போது வந்தாலும் என்னைப் பார்க்க அவரை அனுமதிக்க
வேண்டும் என்ற உறுதிமொழி வாங்கிக் கொண்டு என்னை பாட்டி வீட்டிற்கு கூட்டிப் போனார்.
என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும் பைக் பயணம் முழுவதும் என் கையை அவ்வப்போது
இறுகப் பற்றிக் கொண்ட போது ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்று மட்டும் புரிந்தது.
என்னை அங்கே விட்டு விட்டு மாலையில் வந்து என்னைக் கூட்டிக் கொள்வதாய் கூறியதும் எனக்கு
சந்தேகம் வலுத்து விட்டது, அப்பா திரும்ப வர மாட்டார் என்று.
என் கையை இறுகப் பற்றியிருந்த பாட்டியின் கையை என்
வலிமை கொண்ட மட்டும் முயற்சித்து விடுவித்துக் கொண்டு அழுது கொண்டே ஓடினேன், என் அப்பாவின்
புல்லட் பின்னால் அப்படி ஓடினேன். “அப்பா, அப்பா” என்று கதறி அழுதபடி ஓடியது இன்றும்
நினைவிருக்கிறது. அப்பா எல்லாவற்றிக்கும் தயாராகி தான் வந்திருப்பார் போல.. திரும்பி
திரும்பி என்னைப் பார்த்தாரே தவிர வண்டியை நிறுத்தவில்லை.
ஒரு கட்டத்தில் எனக்கும் மூச்சிரைத்து கால் வலியில்
ஓட முடியாமல் போக, பின்னாலேயே வந்த ஊர்க்காரர்கள் கையில் மாட்டிக் கொண்டேன். ரொம்ப
மூச்சு வாங்கியதால் அருகில் உள்ள ஊர்க்காவல் தெய்வம் குடியிருக்கும் கோயிலில் என்னை
உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தார்கள். அப்போதிருந்துதான் எனக்கு கடவுள் என்ற ஒன்று
இல்லையென்று புரிந்தது. இருந்திருந்தால் நான் இவ்வளவு அழுது கதறியும் என் அப்பா என்னை
விட்டுச் செல்ல அனுமதித்திருப்பாரா?
நீ என்னை விட்டு சில நாள்கள் நீங்கும் போதும் எனக்கு
பயமாய் இருக்கும். இது தற்காலிகமா, நிரந்தரமா என்று. இந்த தடவை ஒரே ஒரு விஷயம் உருப்படியாக
செய்தாய் உன் புகைப்படத்தை பதிவிட்டு.. அடிக்கடி பார்த்துக் கொண்டேன், என் பிரிவுப்
பசியாற்ற.. சில சமயம் கண்களால் பசியாறினேன், பல சமயம் உதடுகளால்.. மரங்கொத்திப் பறவை
ஒரு நொடிக்கு 20 முறை என ஒரு நாளைக்கு 8 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் முறை மரத்தைக்
கொத்துமாம். எனக்கும் அதைப் போல மண்டையோடு வேண்டும்.. உன் புகைப்படத்தை என் உதடுகளால்
ஒற்றியெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை tank cleaner மீனாய் மாறி கண்ணாடிப் பரப்பை 24 மணி நேரமும் அப்பிக் கொண்டே இருக்குமே அது
போல ஒட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என் உதடுகளால். மரங்கொத்தியா, அழுக்குத் தின்னி
மீனா என்னவாய் மாற நான்?
கண்கள்
நிறைய காதலுடன்
உன் வைர மல்லி..
Dear My Moon
Man,
The gap between
my previous letter and today's letter is too long, and the gap between us is a
little more this time. I understand. It is inevitable. But I have restrained my
ten fingers to the point of crumbling cartilage, not to show you my pain or to betray
myself in letters. My goodness, I don't have long nails on my fingers. If I
hadn't cut the nails, they would have entered the palm and come out at the
wrist. Yeah, I tried to control me that much.
You often leave me and keep me in agony. My father was
like this when I was young. He was often away for work. The distance between us
was so great—not with my father, but with my mother. Even though she was
nearby, my mind was searching for my father. I can say so much about the potato
masala he cooks, his handwriting (a bit like you), the Frooti drink he buys for
me, the movies he took me to, and his belly (he was my water bed till I was in
4th standard).
To compensate for all this, he would buy kilos of sweets
when he return back. My sister looked like my father. But my dad liked me only.
During the days at home, he would take me everywhere to go out. That's why,
when mom and dad decided to separate forever, dad refused to leave me with her
and kept me with him.
I was not old enough to understand their fight and its cause. There was only happiness in knowing that I was going to be with my father. My mother is very strict in my studies, and she would gave punishments severely. Once, I scored 95 marks in the social science exam. When my mother asked why 5 marks were less, I said, “They asked me to draw the 5 principles of Panchsheel in the exam. I didn't know whether to draw India or Nehru. So I skipped that 5 mark question,”. my mother got so angry. She explained that draw principles means write only.. not drawing. Then she asked me to kneel down at Infront of our house and punished me to write backwards up to the 12th table.
I still remember that I wrote in slate with my
head down with sore knees and sore hands while crying. I didn't understand at that time that she only did good for me. I told my grandma that I would be happy if I was
with my father. I will not get any punishment like this. I decided that after
mom takes my sister and goes, I should take care of dad responsibly.
But I found it very
difficult to take care of myself. When I was 9 or 10 years old, I washed my own
clothes, combed my hair myself, did housework, ate candy when I was hungry,
and looked longingly at children my age. I don't know how a year went by. My
grandfather and grandmother visited many times and made it clear to my
father that he cannot raise a girl child.
He took me to my grandmother's house with a promise to
let him see me whenever he came. Even though he didn't say anything to me, I
only knew that something bad was about to happen when he gripped my hand often
throughout the bike ride. When he left me there and told me that he would come
and bring me in the evening, I became suspicious that my father would not come
back.
I tried to free my grandmother's hand, with all my
strength to run after my father's bullet. I still remember that I was crying
and shouting, "Dad, dad." As if Father had come prepared for
everything. He turned back and looked at me, but he did not stop the bike.
At one point, I was suffocated and couldn't run because
of the pain in my legs, so I was caught by the villagers who came behind me. As
I was breathing heavily, they made me sit in the nearby temple where the
tutelary deity resides and gave me water. From then on, I realized that there
is no such thing as God. If there had been, would my father have allowed to leave me even though I was crying so much?
Even if you leave me for a few days, I feel scared. Is it
temporary or permanent? This time you did only one good thing by posting your
photo. I looked often; my eyes were so hungry because of our separation.
Sometimes I was hungry with my eyes, many times with my lips. A woodpecker can
peck a tree 20 times a second and 8 thousand to 12 thousand times a day. I want
a skull like that to keep giving fomentation your photo with my lips.
Otherwise, do you know the tank cleaner fish that sticks to the glass surface
for 24 hours? Shall I turn into that fish to stick with your lips for 24 hours?
Woodpecker or tank cleaner fish, what will I become? The choice is yours.
With lots of love in Eyes and Lips,
Your Diamond Jasmine..