Saturday 26 October 2024

You bloom with multicolours and spread the petal soft wings, so are you my flower or my butterfly?

 

அன்புள்ள நிலவுத் தோழனுக்கு,

உன்னை எப்படி கூப்பிடுவதென எனக்கு தெரியவில்லை.. நீ குறும்பாய் சில விஷயங்கள் செய்யும் நேரங்களில் என் குழந்தையாய்  தெரிகிறாய்.. என்னை கண்டிப்புடன் நடத்துகையில் என் தந்தையாய் தெரிகிறாய்.. என்னை அதட்டி சிரிக்க வைக்க முயல்கையில் என் தோழனாய் தெரிகிறாய்.. நான் செய்யும் தவறுகளை இதமாய் சுட்டிக்காட்டி என்னைத் திருத்துகையில் நான் மதிக்கும் ஆசானாய் தெரிகிறாய்..

 

ஆசான் என்று கூறுகையில் என் முதல், முதல் ஆசிரியர் நினைவுக்கு வருகிறார்.. என் அன்னை எப்போதும் சில விஷயங்களில் என்னைப் பெருமையாய் சொல்வதுண்டு.. அதில் ஒன்று, சிறு வயதிலேயே பள்ளிக்கு செல்வேன் என அடம் பிடித்து அழுததால் என் பிறந்த தேதியை 5 மாதம் முன்னர் தேதியிட்டு அந்த ஆசிரியர் என்னை பள்ளியில் சேர்த்துக் கொண்டாராம்.

 

நான் தரையில் அமர்ந்து கற்றுக் கொண்டதை விட அவர் மடியில் அமர்ந்திருந்த நேரம் தான் அதிகம். அது ஒரு அழகான சிறிய கிராமத்துப் பள்ளி.. ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைவர்க்கும் ஒரே ஒரு ஆசிரியர்.. என்னுடைய கிராமத்து வீட்டிற்கும், அப்பள்ளிக்கும் நிறைய தொடர்பு இருந்தது.

 

இரு பக்கமும் அடர்ந்த பச்சையில் குளிர்ச்சியை குவியலாய் கொட்டிக் கொண்டே இருக்கும் இரண்டு வேப்ப மரங்கள்.. கண்ணுக்கு கதகதப்பாய் கால்களுக்கு மெத்தென்ற உணர்வு தரும் செம்மை ஏறிய மண் வாசல்.. சிவந்த மண்ணுக்கு அழகூட்டும் நட்சத்திர வேப்பம் பூக்கள். கூடுதலாய் மஞ்சளும் பச்சையும் கலந்த தங்க நிறத்தில் வேப்பம் பழங்கள்.

 

உனக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் வேப்பங்கொட்டைகளுக்கு கிலோவுக்கு ஒரு சிறிய தொகை கிடைக்கும்.. சில குழந்தைகள் அதை சாப்பிடுவதற்கு பொறுக்குவார்கள். நான் என் அக்காவுடன் சேர்ந்து அதை பொறுக்கி கொண்டு போய் அம்மாவிடம் கொடுப்போம். அம்மா அதற்கு பதிலாக ஆளுக்கு ஒரு அச்சு வெல்லம் தருவார்கள்.


அதை வாங்கிக் கொண்டு பள்ளியின் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை வாய்க்காலில் கால் நனைத்தவாறே சாப்பிடுவோம்.. ஆமாம் ஆமாம்.. நக்கித்தான்.. குட்டி குட்டி மீன்கள் எங்கள் கால்களை கூச வைத்தாலும் காலில் ஜில்லென்று ஓடை நீர் பட்டுக் கொண்டேயிருக்க, நாக்கில் இனிய தேன் ரசமாய் வெல்லச்சுவை பரவும்.


அந்த பள்ளியில் படிக்கும் நாட்களில் எப்படி படித்தேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் அந்த தலைமை ஆசிரியர் எனக்கு முத்தம் கொடுத்ததும், இன்னொரு தாயாய் மாறி எனக்கு சோறு ஊட்டி விட்டதும் தான் எனக்கு நினைவில் மிச்சமாய் இருக்கிறது.


சமயத்தில் தூங்கவும் வைத்து விடுவார்கள். மடியிலேயே இருப்பதால் வகுப்பு பேதமின்றி அனைத்து வகுப்பு பாடங்களையும் கேட்டுக் கொள்வேன். புரிந்ததா இல்லையா என்றெல்லாம் நினைவில் இல்லை. பள்ளி விடுமுறை நாட்களில் அவர்தான் என்னை மிஸ் செய்வார். நானோ பட்டாம் பூச்சி பிடிப்பதற்கு என் நண்பர்கள் பட்டாளத்தோடு ஆற்றின் கரைகளில் வேட்டைக்கு கிளம்பி விடுவேன்.


சிறு வயதில் எல்லாப் பட்டாம் பூச்சிகளின் பெயர்களும் எங்களுக்கு அத்துப்படி. இப்போது நினைவில் இல்லை. எனக்கு ஏனோ கனகாம்பர நிறத்தில் இருக்கும் பட்டாம் பூச்சி மிகவும் பிடிக்கும். ஓரங்களில் கருமையேறி ஒரு பெண்மைத்துவம் நிரம்பி வழியும். அவ்வளவு மென்மையாய் இருக்கும் அதன் கால்களை தொட்டுப் பார்க்கையில் உடலோடு உள்ளத்திலும் ஒரு குறுகுறுப்பு ஏறும்.


 மெத்,மெத்தென்று கருப்பும் சிவப்புமாய் பெரிய கண்களோடு இருக்கும் வெல்வெட் பட்டாம்பூச்சியை பார்க்கவே எனக்கு பயமாய் இருக்கும்.அந்த பட்டாம்பூச்சி மட்டும் சுள்ளென்று கடித்து விடும். ஆனால் அதைப் பிடிப்பது நண்பர்களிடையே ஒரு வீர தீர செயல் என்பதால் அதைப் பிடிக்க எங்களிடையே போட்டியாய் இருக்கும்.

 

பட்டாம் பூச்சி பிடிப்பதென்பது மேம்போக்காய் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு போலத்தான் தோன்றும். ஆனால் அதற்கு மனதையும் உடலையும் ஒரு நிலைப்படுத்துவது முக்கியம். திருட்டுத் தொழிலை பழக ஆரம்பிக்கும் கட்டத்தில் அவர்களுக்கு முதல் பயிற்சி என்னவென்று தெரியுமா? கை விரல்கள் நடுங்காமல் இருக்க ஐஸ் வாட்டரில் கைகளை சில நிமிடங்கள் வைத்திருக்க செய்து மரத்துப் போக வைத்து பின்பு தொழில் பழக்குவார்களாம்.


அப்போதுதான் பாக்கெட்களில் திருடுவதற்கு கை விரல்களை நுழைக்கும் போது விரல்கள் நடுங்காமல் லாவகமாய் எடுக்க வருமாம். அது போலத் தான் பட்டாம்பூச்சி பிடிக்க செல்லும் போது முதலில் கை விரல்களை முன்னோக்கி  வைத்துக் கொண்டே படிப்படியாய் பூனைப் பாதம் வைத்துக் கொண்டே அதன் அருகில் செல்ல வேண்டும்.


அருகில் சென்ற பின் கைகளை உயர்த்தினால் காற்றின் விசையில் அது எச்சரிக்கையாகி பறந்து விடும். மூச்சு விடுவதும் அப்படித்தான்.. ஒரு பூ மலர்ந்து விரிவதைப் போல நம் நுரையீரல் இயங்க வேண்டும். நாம் நிற்கின்ற போஸ் -சில் சிறிது நேரம் சிலையாய் நிற்கவும் தனி பயிற்சி தேவை. அதன் இறக்கை இணைந்து இருக்கும் வரைதான் நமக்கான நேரம். விரிக்க ஆரம்பித்த பின் அதைப் பிடிக்க முயலக் கூடாது. கைகளில் ஏடாகூடமாய் நசுங்கி போக சாத்தியம் அதிகம்.


சில குறும்பு பிள்ளைகள் சிறு சிறு குத்துச்செடிகளை ஒன்றாய் கட்டிக் கொண்டு பட்டாம்பூச்சிகளை அடித்துப் பிடிப்பார்கள். எனக்கு அவர்களோடு சண்டையிட அந்த வயதில் பயமாய் இருக்கும். பெரும்பாலும் அந்த அடியில் பட்டாம்பூச்சி இறந்து விடும். அதை பரிதாபமாய் பார்ப்பதும், சின்ன குழி தோண்டி மண்ணால் மூடிப் புதைப்பதையும் தவிர எனக்கு அப்போது வேறு வழி தெரியாது.


இருப்பதிலேயே ஊசித்தட்டான் ஒரு சோம்பேறி. மெல்லிய கால்களைக் கொண்டு கண்ணைப் பறிக்கும் வர்ணங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டே சுற்றி வரும். அதிலேயே பெரிய தட்டான்களை எருமைமாட்டு தட்டான்கள் என்று அழைப்போம். சமயங்களில் வலிக்கும் அளவுக்கு கடித்து விடும். அதன் தலை கண்ணாடியை போல ஒரு பட்டாணி அளவில் இருக்கும். பெரிய தட்டானுக்கு மட்டும் மெல்லிய பூ கட்டும் நூலினால் அதன் வாலில் கட்டி அது பறக்கும் இடங்களுக்கு எல்லாம் பின்னாடியே நாங்களும் பறந்து திரிவோம்.


 எனக்கு இப்போதெல்லாம் அந்த ஆசைதான் வருகிறது. அந்த பட்டாம் பூச்சிக்கு கட்டி விட்டது போல உன்னையும்  ஒரு கயிறால் கட்டி (ஆமாம், ஆமாம் பூக்களினால் செய்த கயிறுதான்..) நீ போகும் இடம் எல்லாம் உன் பின்னாலேயே அலைந்து திரிய வேண்டும். உனக்கும் அந்த ஆசையிருந்தால் நீயும் ஒரு கயிற்றினால் என்னைக் கட்டி விடு.. பூக்கயிறோ, பொன் மஞ்சள் கயிறோ எதுவாய் இருந்தாலும் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும்,


                        உன் தோழி..

                        உன் குழந்தை..

                        உன் துணைவி..

                        உன் அன்னை..

                        உன் வைரமல்லி..


You bloom with multicolours and spread the petal soft wings, so are you my flower or my butterfly?

 

Dear My Moon Friend,

I don't know how to call you. You seem to be my baby when you do some naughty things. You seem to be my dad, when you behave a strict one. You seem to be a friend trying to make me laugh. You seem to be the teacher I respect, when you point out the mistakes I'm making.

 

I remember my first teacher. My mother was always a little proud of me for certain things. One of them was my stubborn crying to go to school as a child. So my teacher enrolled me in school 5 months before my birth date. I spent more time sitting on her lap than I sat in the floor of classroom. It was a village primary school. All students from class 1 to 5 have only one teacher. My home and my school had some similarities.


Two tall evergreen neem trees on either side of the fence spread cool shade. The red earth floor gives a soft feel to the eyes and feet. Milky white star neem flowers on the ground. The fruits are green and yellow in color. I don't know if you know it or not. At that time, those neem pods were worth little. Some children will eat it. But my sister and I collected and gave it to my mother. Instead, my mother used to give us a piece of jaggery.


We got it from her and rushed to the back side of our school. And we will start to eat it by dipping our feet in the running stream behind the school. Yes yes.. we licked it up.. The little fishes will caress our feet, while the water gurgles on the feet, spreading sweet honey-like molasses on the tongue.


I don't remember what I studied in that school. But all I remember is that the headmaster kissed me often, became another mother and fed me too. She put me to sleep on time. I was listening to all classes from 1st to 5th class except sleep time. I don't remember if I understood or not.


She felt like she was missing me during the school holidays. But I went to hunting along the river with my gang of friends to catch butterflies. As children, we all know the names of butterflies. I don't remember nowadays.


I always love the butterfly in the color of the crossandra (firecracker) flower. A black color fills the fringed sides of the feather and it seems to hold the feminine character inside. When touched, the tarsi are so soft that our body gets goosebumps. But I was scared to look at the velvet butterfly which is black and red with its big eyes. Even though it would bite, catching it is a brave act among friends so we would compete to catch it.


Catching butterflies seems like a recreational activity. But it is important to balance our mind and body. Do you know what their first training was when they started to become a professional thief? To keep the fingers from trembling, they put their hands in ice water for a few minutes and then make the fingers numb.


Only then will you be able to take advantage of the fingers not trembling when you insert their fingers into the pockets to steal. Similarly, when you go to catch a butterfly, you should first go near to it by keeping the fingers of the hand forward and stepping the feet like a cat step by step.


If you raise your hands after getting close, it would fly because of the wind's force. It's the same with breathing. Our lungs should inhale and exhale like a flower blossom. The posture in which we are standing requires special training to stand as a statue for some time. It's only a matter of time until it's wings keeping close each other. Shouldn't try to catch it after it starts to spread it's wings. It is more likely to get stuck in the hands.


Some mischievous children were tied the ends of bushy plants together and beat them to catch butterflies. I was afraid to fight them in that age. Most often the butterflies were died in between the leaves. I dig a hole and bury it without any other option.


oosi thattan (Dragon fly) was a lazy one. It flies around us in eye-catching colors with slender legs. The bigger ones are called buffalo fly. Sometimes it bites our fingers, which is painful. Its head is like a pea-shaped and shining like a mirror ball. Only for big size fly, we tie a thin thread which is used for tying flower to its tail and we run behind it wherever it flies.


That's what I always want. I have to tie you with a rope (yes, yes, it's a rope made of flowers), like a tied butterfly and wander behind you wherever you go. If you want it too, tie me up with a rope. Whether it be made with blooming flowers or golden yellow threads, I happily await acceptance.


                                                    



                            as your Friend..

                            as your Baby..

                            as your Partner...

                            as your Mother..

                            as your Diamond Jasmine always..


Template by:

Free Blog Templates